இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி பங்கேற்பது குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழல், வீரர்களின் மனநலத்தைப் பாதித்துள்ளதாக அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வேதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி, வங்கதேசம் விளையாட வேண்டிய போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஐசிசி-யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய சாண்டோ, “முக்கியமான தொடர்களுக்கு முன்பாக இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது; இது வீரர்களின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கிறது.

இருப்பினும், ஒரு தொழில்முறை வீரர்களாக ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்பது போல நாங்கள் எங்களை வெளிப்படுத்திக் கொண்டு, பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார். இந்த நிச்சயமற்ற சூழலிலும், மைதானம் எதுவாக இருந்தாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த அணியினர் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் எம். நஜ்முல் இஸ்லாம் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்கு சாண்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சர்ச்சைகளை அமைதியான முறையில் கையாள வேண்டும் என்று அறிவுறுத்திய தமீம் இக்பாலை, நஜ்முல் இஸ்லாம் “இந்தியாவின் ஏஜென்ட்” என்று விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த சாண்டோ, “நாங்கள் பார்த்து வளர்ந்த மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான தமீம் இக்பால் மீது இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் ஒரு முன்னாள் கேப்டன் மட்டுமல்ல, வங்கதேச கிரிக்கெட்டின் அடையாளம். வீரர்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்தபட்ச மரியாதையை வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

எங்களைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பே இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். வாரியத்தின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்கள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒற்றுமையுடன் செயல்படுவதே இப்போதைய முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில், ஐசிசி மற்றும் பிசிபி இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதால், வங்கதேச அணி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.