அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தற்போது பந்துவீச்சாளர்களுக்கு மிரட்டலாக திகழ்ந்தாலும், இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்க கேப்டன் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பே மிக அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக சூர்யகுமார் யாதவ் ரன்கள் சேர்க்கத் தடுமாறி வருவது கவலை அளிப்பதாகக் கூறிய அக்தர், பிடிவி ஸ்போர்ட்ஸ் (PTV Sports) தளத்தில் பேசுகையில், “இந்திய அணியிடம் அபரிமிதமான திறமைகள் உள்ளன, ஆனால் சூர்யகுமார் போன்ற ஒரு ‘கேம் சேஞ்சர்’ ஃபார்முக்குத் திரும்பினால் மட்டுமே இந்தியா மீண்டும் மகுடம் சூட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், கேப்டன் என்ற முறையில் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணிக்குத் தெம்பளிக்க வேண்டியது கட்டாயம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.