கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறைந்த தலைவர் விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தேமுதிகவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த கூட்டத்தில், தொண்டர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில் திரண்டு வந்துள்ளதாகவும், விஜயகாந்தின் கோட்டையான கடலூரில் கட்சி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாகவும் நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

மாநாட்டில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி அமையும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த ரகசியம் தற்போது வரை தனக்கு மட்டுமே தெரியும் என்றும், தை பிறந்ததும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.

தேமுதிகவை யாராலும் சாதாரணமாக எடை போட முடியாது என முழங்கிய அவர், வெற்றியை இலக்காகக் கொண்டு தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.