தமிழகத்தில் தேர்தல் ஜூரம் இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய விஜய பிரபாகரன், விஜயகாந்த் மறைந்தாலும் தொண்டர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்றும், தேமுதிக சேரும் கூட்டணியே ‘மெகா கூட்டணி’ என்றும் நம்பிக்கையோடு பேசினார். மேலும், தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களே ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைக்கும் சக்தியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசியல் பேச்சுகளுக்கு நடுவே, ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் விஜய்க்கு விஜய பிரபாகரன் ஒரு தம்பியாக அன்பான அட்வைஸ் ஒன்றையும் வழங்கினார். தற்போது காங்கிரஸார் விஜய்யின் படத்திற்கு ஆதரவாகப் பேசுவது, அவரைத் தங்கள் பக்கம் இழுக்கப் போடும் தூண்டில் போன்றது என்றும், அதை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரித்தார். விருதுநகரில் காங்கிரஸ் என்ன செய்தது என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், அரசியலில் எச்சரிக்கையாக இருக்குமாறு விஜய்க்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
