தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 19 வயது மாணவியான வர்ஷினி பயின்று வந்தார். இன்று அவர் கல்லூரிக்குச் சற்றுத் தாமதமாக வந்துள்ளார்.

இதைக் கண்ட விரிவுரையாளர்கள் அவரை வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதால் உடல்நிலை சரியில்லாமல் தாமதமாகிவிட்டதாக வர்ஷினி விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அந்த விரிவுரையாளர் மனிதாபிமானமற்ற முறையில், “மாதவிடாய் காரணத்தால் தான் தாமதம் ஆனதா? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஆதாரம் காட்டினால் தான் உள்ளே விடுவேன்” என்று மாணவர்களின் முன்னிலையில் ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளார்.

மேலும், வர்ஷினி ‘நடிக்கிறார்’ என்று கூறி அவரை தரக்குறைவாகத் திட்டியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷினி, அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றார்.

வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வர்ஷினியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வர்ஷினியின் மூளையில் ரத்த உறைவு (Brain Clot) ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஆசிரியரின் அவமானமான பேச்சால் ஏற்பட்ட அதீத மன அழுத்தமே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் என வர்ஷினியின் பெற்றோர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த விரிவுரையாளரைக் கைது செய்யக் கோரி பலரும் கொந்தளித்து வருகின்றனர்.