நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. தற்போது இந்தப் படம் மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தணிக்கைச் சான்றிதழ் குறித்த தீர்ப்பு நாளை (ஜனவரி 9) வழங்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பு வெளியாக தாமதமாவதால், திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகாது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரவிமோகன் விஜய்க்கு ஆதரவாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“அண்ணா.. உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு என்று ஒரு தனித் தேதி தேவையில்லை; நீங்கள்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கம். அந்தப் படம் வெளியாகும் தேதி எதுவாக இருந்தாலும், அன்றைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல் பண்டிகை தொடங்கும். நான் எப்போதும் விஜய் அண்ணாவுடன் நிற்பேன்.”
இவ்வாறு ரவிமோகன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதரவுப் பதிவு விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
