நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகாது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna pic.twitter.com/ccFy6iK4qM
— Ravi Mohan (@iam_RaviMohan) January 8, 2026
வழக்கின் தீர்ப்பு வெளியாக காலதாமதம் ஆவதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த விஜய்யின் கடைசித் திரைப்படம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், நடிகர் ரவி மோகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், படம் தள்ளிப்போன செய்தியைக் கேட்டு தனது இதயம் நொறுங்கிவிட்டதாகவும், விஜய்யின் பக்கம் நிற்கும் பல கோடி தம்பிகளில் தானும் ஒருவன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் எந்த நாளில் வெளியாகிறதோ, அந்த நாள்தான் தங்களுக்கு உண்மையான பொங்கல் திருநாள் எனத் தெரிவித்துத் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
