தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் அமைந்துள்ள வாட் பரிவத் என்ற புத்த மதக் கோயில் கடவுள்களின் சிலைகளுடன் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் பல திரைக்கதை கதாபாத்திரங்களின் சிலைகளைக் கொண்டுள்ள வினோதக் காட்சிகளால் இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பழமையான இந்த ஆலயத்தில் கடந்த 2008 ஆண்டு முதல் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் வருங்காலத் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் நவீன கால சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுவர்களில் கேப்டன் அமெரிக்கா மற்றும் ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் முதல் மிக்கி மவுஸ் மற்றும் பிகாச்சு போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வரை செதுக்கப்பட்டுள்ளன.
View this post on Instagram
மேலும் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் புரட்சியாளர் சே குவேரா ஆகியோரின் உருவங்களுடன் தற்கால டிஜிட்டல் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செல்பி எடுக்கும் முயல்கள் மற்றும் கைபேசி வைத்திருக்கும் அரக்கர்களின் கலைப்படைப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. குறிப்பாக டேவிட் பெக்காமின் தங்க முலாம் பூசப்பட்ட சிலை பிரதான பீடத்திற்கு அடியில் அமைந்துள்ளதால் இந்த ஆலயம் மக்களால் டேவிட் பெக்காம் கோயில் என்றே அன்புடன் அழைக்கப்படுகிறது.
இரண்டாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கோயிலின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரது வியப்பைத் தூண்டி வருகின்றன.
