சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் திமுக மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார்.
புதிய கட்சிகளின் வருகை குறித்துப் பேசிய அவர், “யார் வேண்டுமானாலும் புதிதாக வரலாம், ஷோ காட்டலாம்; ஆனால் காகித அட்டைகள் சிறிய காற்றடித்தால் கூட காணாமல் போய்விடும்” என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்துப் பேசுகையில், தன்னை முதலமைச்சராக விடமாட்டோம் என்று அமித்ஷா கூறுவது நகைப்புக்குரியது என்றும், தான் அந்தப் பதவியை ஒருபோதும் கேட்கவில்லை என்றும் கூறினார்.
“உங்கள் மிரட்டல்கள் எல்லாம் எங்களிடம் பலிக்காது; இது பயப்படுவதற்கு அதிமுக அல்ல, அண்ணா உருவாக்கிய திமுக” என்று சாடிய அவர், தமிழக மக்கள் மீண்டும் ஸ்டாலினையே முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
