சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜியா சாங்லாங் (35) என்பவரின் நெகிழ்ச்சியான போராட்டக் கதை, மனிதாபிமானத்தின் மகத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து மணம் முடித்த தனது மனைவி லி, கடந்த ஜூலை மாதம் ‘அக்யூட் மைலாய்டு லுகேமியா’ எனப்படும் தீவிர ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து ஜியா நிலைகுலைந்து போனார். 8 வயது மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இக்குடும்பத்தின் சேமிப்பு முழுவதும் சிகிச்சைக்குச் செலவானது.
நண்பர்களிடம் பெற்ற கடன் மற்றும் தனது கணினியை விற்றது என சுமார் ரூ.41 லட்சம் வரை செலவு செய்தும், அடுத்தகட்டமாகத் தேவைப்படும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் போதிய நிதியின்றி ஜியா தவித்தார்.
வேறு வழியின்றி, தனது மனைவியின் மருத்துவச் செலவுக்காகச் சாலை ஓரத்தில் அமர்ந்து சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்கத் தொடங்கினார்.
ஜியாவின் இந்த உருக்கமான நிலையைச் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்த ஃபாங் என்ற 50 வயது விவசாயி, மனிதாபிமான அடிப்படையில் ஜியாவுக்கு உதவ முன்வந்துள்ளார்.
தன்னிடம் உள்ள 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை எவ்விதக் கட்டணமுமின்றி ஜியாவுக்குத் தானமாக வழங்கிய ஃபாங், “கடினமான காலத்திலும் மனைவியைக் காக்கப் போராடும் இந்த இளைஞனின் பொறுப்புணர்வு என்னைக் கவர்ந்தது; அவருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தற்போது ஜினான் நகரில் அந்தச் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை விற்று வரும் ஜியா, “இருளில் தவித்த எனக்கு இந்த விவசாயி ஒரு ஒளிக்கீற்றாகத் தெரிகிறார்; நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் குழந்தை வளர்வதைப் பார்க்க வேண்டும் என்பதே எங்களது ஒரே ஆசை” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், விவசாயி ஃபாங்கின் பெருந்தன்மையையும் ஜியாவின் காதலையும் நெட்டிசன்கள் மனமாரப் பாராட்டி வருகின்றனர்.
