கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் செயல்முறைப் பயிற்சிக்கான பொருட்களை வாங்க வால்பாறை வந்த மாணவி, மீண்டும் ஊர் திரும்புவதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த சோலையாறு பகுதியைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் சந்தோஷ் (22) என்பவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக கடும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கல்லாறு பிரிவு பகுதியில் பேருந்தில் இருந்து அவசரமாக கீழே இறங்கினார்.
எனினும், விடாமல் பின்தொடர்ந்து வந்த சந்தோஷ், மாணவி மீது கல் வீசித் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, சந்தோஷ் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி அளித்த புகாரின் பேரில், வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
