தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன் ‘அதிகாரத்தில் பங்கு’ எனக் குரல் கொடுத்திருந்த நிலையில், இப்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் அதே பாணியில் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
“தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணிதான் அரசியல் நிஜம்; கூட்டணி இல்லாமல் இங்கே யாரும் தனித்து வெல்ல முடியாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ள கருத்து இதோ,ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. எனவே, கூட்டணி அமைப்பதே வெற்றிக்கான வழி.
இதுவரை ‘தொகுதிப் பங்கீடு’ (Seat Sharing) பற்றி மட்டுமே பேசி வந்தோம். ஆனால், இனி ‘அதிகாரப் பகிர்வு’ (Power Sharing) பற்றிப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) காங்கிரஸை ‘இயற்கையான கூட்டாளி’ என அழைத்து வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சு திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசில் காங்கிரஸ் பிற கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல, மாநிலங்களிலும் அது நடக்க வேண்டும் என்பதே மாணிக்கம் தாகூரின் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.
