தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத விரக்தியில், அமித்ஷாவை வைத்து பாஜக அச்சுறுத்தல்களைப் பரப்பி வருவதாக செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ‘தனித்து ஆட்சி’ எனப் பேசுவது கூட்டணியில் உள்ள குழப்பத்தையே காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் 80 சதவீதத்திற்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போல் உள்ளது என்றும், நாட்டின் மொத்த கடனை 200 லட்சம் கோடியாக உயர்த்திய பாஜகவிற்கு தமிழகத்தின் வளர்ச்சியை விமர்சிக்கத் தகுதி இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வரிப் பகிர்வில் தமிழகத்தை வஞ்சிப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தித் திணிப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் மற்றும் தமிழக விரோதப் போக்கு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் பாஜகவையும், அதற்குத் துணை போகும் அதிமுகவையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் எச்சரித்துள்ளார். அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், அது ‘இந்தியா’ கூட்டணிக்கே கூடுதல் பலத்தைத் தரும் என்றும் செல்வப்பெருந்தகை அந்த அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
