பிக்பாஸ் கார் டாஸ்க்கின் போது சக போட்டியாளர் சாண்ட்ராவை எட்டி உதைத்து தள்ளிய பார்வதியின் செயல், ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு விளையாட்டு என்று கூட பாராமல் வன்முறையை கையாண்டதற்காக அவருக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து வார இறுதி நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பார்வதியின் செயலை மிகக் கடுமையாகக் கண்டித்ததோடு, அவருக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்தச் சம்பவம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு கறையாகப் பார்க்கப்பட்ட நிலையில், பார்வதி வெளியே சென்றாவது தன் தவறை உணர்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

​ஆனால், வெளியே வந்த பார்வதியோ தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக, தனது செயலை நியாயப்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வருகிறார். இது டிஆர்பி-க்காக (TRP) செய்யப்பட்ட ஒரு நாடகம் என்றும், சாண்ட்ரா வேண்டுமென்றே நடித்தார் என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு நடந்தும் இன்னும் திருந்தவில்லையா?” என்று கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். பார்வதியின் இந்த பிடிவாதமான அணுகுமுறை அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.