மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள பாரதி அகாடமி ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பத்தாம் வகுப்பு மாணவி ரோஷினி கோஸ்வாமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் ரோஷினி மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, இலக்கை எட்டி மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

மேலும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அனைவரும் அவரைப் பாராட்டத் தயாராக இருந்த நிலையில், திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பேசிய ரோஷினியின் தாய் சுனிதா பென், தனது மகள் காலையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்ததாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அவர், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தனது தாயிடம் ஆசி பெற்றுச் சென்றாராம்.

இதனால் பந்தயத்தில் வெற்றி பெற்ற செய்தியைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே அவரின் மரணச் செய்தி வந்ததைக் கேட்டு குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். 15 வயது மாணவி ஒருவருக்கு மாரத்தான் ஓடிய பிறகு ஏற்பட்ட இந்த திடீர் மரணம், சக மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.