கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளை மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்த மாமியார் மற்றும் அவரது தோழியை போலீஸார் கைது செய்தனர்.
வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜா என்பவரின் மனைவி நந்தினி (29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா தற்கொலை செய்து கொண்ட நிலையில், நந்தினி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மரிய ரொசாரியோ (36) என்பவரை நந்தினி காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இந்தத் திருமணம் மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு (55) பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாமியார் – மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நந்தினியை ஒழித்துக்கட்டிவிட்டு, தனது மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க கிறிஸ்தோப்மேரி திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று (டிசம்பர் 29), குடும்பப் பிரச்சினைகள் தீர மாந்திரீகப் பூஜை செய்வதாகக் கூறி நந்தினியை கிறிஸ்தோப்மேரி அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு அவரது தோழி எமிலியும் (52) உடந்தையாக இருந்துள்ளார். அதிகாலையில் சோழம்பட்டு மணிமுக்தா ஆற்றின் கரையோரம் நந்தினியை அழைத்துச் சென்றுள்ளனர்
அங்கு எமிலி பூஜை செய்வது போல் பாவனை செய்ய, நந்தினியை கண்களை மூடி அமரச் சொல்லியுள்ளனர். நந்தினி கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலையைத் துண்டித்து கிறிஸ்தோப்மேரி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க தலையையும், உடலையும் தனித்தனியாக ஆற்றங்கரையில் புதைத்துவிட்டுத் தப்பியுள்ளனர்.
தனது மனைவியைக் காணவில்லை என மரிய ரொசாரியோ அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் கிறிஸ்தோப்மேரியைப் பிடித்து விசாரித்தபோது, அவர் கொலையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கிறிஸ்தோப்மேரி மற்றும் அவருக்கு உதவிய எமிலி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
