தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பொதுவெளியில் தனது மெய்க்காப்பாளரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு பூஜைக்குப் பிறகு பசுவைச் சுற்றி வந்து வழிபாடு செய்வது போன்ற காட்சிகள் உள்ளன. அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை நோக்கி நெருங்க முயன்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற மெய்க்காப்பாளர் ஒருவர், முதல்வருக்கு மிக அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக கோபமடைந்த ரேவந்த் ரெட்டி, அனைவர் முன்னிலையிலும் அந்த மெய்க்காப்பாளரை அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

கடந்த 2025-ம் ஆண்டு ‘நவ தெலுங்கானா’ நாளிதழின் 10-வது ஆண்டு விழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி, “மூத்த பத்திரிகையாளர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக உழைக்கிறார்கள். ஆனால், இன்றைய இளம் பத்திரிகையாளர்களுக்குப் பொது அறிவோ, புரிதலோ இல்லை. சில நேரங்களில் அவர்களை அறைய வேண்டும் போல் தோன்றுகிறது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இவரது இந்தப் பேச்சுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தனது கருத்திற்கு மன்னிப்பு கோரினார்.

தற்போது மெய்க்காப்பாளரைத் தாக்கிய சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு மாநிலத்தின் முதல்வர், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது முறையல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் மீண்டும் அனலைக் கிளப்பியுள்ளது