புதுச்சேரியில் பணியாற்றி வந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி.) இஷா சிங் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளை டெல்லிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஷா சிங், முறையான அனுமதிச் சீட்டு (Pass) இல்லாத எவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்து கண்டிப்பு காட்டினார்.

கட்சி நிர்வாகிகளும், புஸ்சி ஆனந்தும் தொண்டர்களை உள்ளே அனுமதிக்குமாறு கோரியபோது, “காவல்துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டாம். அசம்பாவிதங்கள் நடந்தால் நாங்களே பொறுப்பேற்க வேண்டும். கரூரில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? விதிகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்” என ஆவேசமாகப் பதிலளித்தார். இவரது இந்தத் துணிச்சலான நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலானதோடு, புதுவை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் அழைத்து இவரைப் பாராட்டினார்.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பு செயலாளர் ராகேஷ்குமார் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து புதுவை ஐ.ஜி. அஜித்குமார் சிங்களா மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால் ஆகியோரும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டி மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற பெண் அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது புதுச்சேரி அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியேள்ளது.