கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புதையல் கிடைக்கும் என்ற ஆசையில், தத்தெடுக்கப்பட்ட ஓராண்டு ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற தம்பதியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதாகரித்து உடனடியாகசெயல்பட்ட அதிகாரிகள் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட் தாலுகா, சுலிபெள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சையது இம்ரான். இவருக்கும் இவரது மனைவிக்கும் குழந்தை இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளி ஒருவரிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தனர். எனினும், இந்தத் தத்தெடுப்பு முறைப்படி சட்டப்பூர்வமாக நடைபெறவில்லை. போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்தும், குழந்தையின் உண்மையான தந்தையுடன் ரகசிய ஒப்பந்தம் செய்தும் குழந்தையை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பவுர்ணமி தினமான நேற்று இரவு குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு (Childline) மர்ம நபர் ஒருவர் அவசர அழைப்பு விடுத்தார். அதில், “இம்ரான் வீட்டில் ஒரு வயது குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது, உடனே தடுங்கள்” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக சுலிபெள்ளி கிராமத்திற்கு விரைந்து சென்று இம்ரானின் வீட்டைச் சோதனையிட்டனர்.
அதிகாரிகள் வீட்டின் உள்ளே சென்றபோது அங்கு ஒரு அறையில் சிறிய குழி ஒன்று தோண்டப்பட்டிருந்தது. பூஜைகள் செய்வதற்காக ஊதுபத்தி, மலர்கள் மற்றும் சடங்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் வருவதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், வீட்டில் புதையல் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில், பவுர்ணமி இரவில் குழந்தையை நரபலி கொடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட அதிகாரிகள், அதனைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத தத்தெடுப்பு மற்றும் நரபலி முயற்சி தொடர்பாக இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
