கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியில் ஒரே நாளில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பள்ளி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை 3 சிறுவர்கள் கூட்டு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர். இதேபோல் உப்பள்ளி அசோக் நகர் காவல் நிலையப் பகுதியிலும் மற்றொரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரைத் தாக்கவும் செய்துள்ளனர்.

இந்த அநாகரிகச் செயலைத் தடுக்க வந்த சிறுமியின் தந்தையையும் அந்த கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு சிறுவர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பெற்றோர் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் சசிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.