உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், தென்கொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காதலியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த டக் ஹீ யூ என்பவர், மணிப்பூரைச் சேர்ந்த லுஞ்ஜியானா பமை என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லுஞ்ஜியானா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து டக் ஹீ யூவின் மார்பில் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த அவரை லுஞ்ஜியானாவே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரிவிக்காமல் அந்தப் பெண் தப்பியோடிய நிலையில், டக் ஹீ யூவின் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இறுதியில், கிரேட்டர் நொய்டா பகுதியில் பதுங்கியிருந்த லுஞ்ஜியானாவை நாலெட்ஜ் பார்க் காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
