சமூக வலைதளங்கள் என்பது திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக இருக்க வேண்டுமே தவிர, வன்முறையைக் கொண்டாடும் இடமாக மாறிவிடக்கூடாது. 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் கையில் கத்தியுடன் ரீல்ஸ் செய்து, அதை ஒரு பெருமையாகப் பதிவிடுவதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது போன்ற பதிவுகள் குறித்து கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதமே புகார் அளிக்கப்பட்டும், ஒரு வருடம் கடந்த நிலையிலும் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். சட்டத்தை மதிக்காத இத்தகைய போக்கு சிறுவர்கள் மத்தியில் வளர்வது, எதிர்கால சமுதாயத்தைச் சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், சட்ட ஒழுங்கிற்கும் பெரும் சவாலாக அமையும்.

தமிழக அரசு ஒருபுறம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு இணையாகக் காவல்துறையின் கண்காணிப்பும் டிஜிட்டல் தளங்களில் வளர வேண்டியது அவசியமாகும். சமூக வலைதளங்களில் உலவும் இத்தகைய ஆபத்தான பதிவுகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தத் தவறினால், அது அடுத்த வரும் திமுக ஆட்சியிலும் காவல்துறைக்குத் தேவையற்ற அவப்பெயரைத் தேடித்தரும். பொதுமக்களால் புகாரளிக்க மட்டுமே முடியும், ஆனால் தகுந்த நடவடிக்கை எடுத்து தவறு செய்பவர்களைத் திருத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடமே உள்ளது. இனியாவது காவல்துறை விழித்துக்கொண்டு, இத்தகைய வன்முறைப் பதிவுகளைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.