வெனிசுலா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்றும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கமலா ஹாரிஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நிக்கோலஸ் மதுரோ ஒரு மிருகத்தனமான மற்றும் சட்டவிரோத சர்வாதிகாரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை முறையானது என்று கூறிவிட முடியாது. இது மிகவும் விவேகமற்ற செயல்.
இந்தத் தாக்குதல் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கோ அல்லது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கோ நடத்தப்பட்டது அல்ல. மாறாக, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், பிராந்திய அளவில் தன்னை ஒரு பலசாலி காட்டிக்கொள்ளவும் டிரம்ப் விரும்புகிறார். இதற்காக நடத்தப்படும் போரினால் இறுதியில் பாதிக்கப்படப் போவது அமெரிக்க மக்கள் தான்.”
டிரம்பின் முரண்பாடான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிய கமலா ஹாரிஸ்:போதைப்பொருள் கடத்தல் மீது டிரம்பிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், தண்டனை பெற்ற கடத்தல்காரர்களுக்கு அவர் மன்னிப்பு வழங்கியிருக்க மாட்டார். மதுரோவின் கூட்டாளிகளுடன் ரகசிய ஒப்பந்தங்களைத் தொடரும் டிரம்ப், வெனிசுலாவின் சட்டப்பூர்வமான எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டியுள்ளார்.
“அமெரிக்க மக்கள் இத்தகைய பொய்களைக் கேட்டு சோர்வடைந்துள்ளனர். எண்ணெய் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்காக டிரம்ப் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மக்கள் விரும்பவில்லை. மதுரோவின் சர்வாதிகாரத்தைப் போலவே, டிரம்பின் இந்த அத்துமீறிய நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது” என அவர் பதிவிட்டுள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவிற்குள்ளேயே அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை கமலா ஹாரிஸின் இந்த விமர்சனம் உறுதிப்படுத்தியுள்ளது.
