தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கூட்டணி குறித்து அதிரடியான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனப் பழமொழியைச் சொல்லி மர்மத்தை நீடித்துள்ளார்.
அதிமுகவின் சட்ட விதிகள் குறித்துப் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பை மிகக் கடுமையாகச் சாடினார்:
“அதிமுக பொதுச்செயலாளரைத் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த விதி. ஆனால், இன்று அந்த விதிகள் மீறப்பட்டுள்ளன” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளோம்; நீதி கிடைக்கும் வரை எங்களது சட்டப் போராட்டம் ஓயாது என உறுதிபடத் தெரிவித்தார்.
அதிமுகவின் புகழை மறைக்க நினைப்பவர்களுக்குத் தொண்டர்களும் மக்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
