இந்திய கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக பெரும் விவாதப் பொருளாக இருந்த வங்கதேச வீரர் விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை உடனடியாக அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறுகையில், “தற்போது நிலவும் சூழல் மற்றும் அண்மைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்குப் பதிலாக வேறொரு மாற்று வீரரைத் தேர்வு செய்து கொள்ளவும் அந்த அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடி என்ற பெரும் தொகைக்கு ஏலம் எடுத்திருந்தது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக அவர் கருதப்பட்ட நிலையில், தற்போது பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவு அந்த அணிக்குச் சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வங்கதேசத்தில் அண்மைக்காலமாக இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என பாஜக மற்றும் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தத் தொடர் அழுத்தம் மற்றும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டே பிசிசிஐ இந்தத் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.