டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மன் கில் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தென்னாப்பிரிக்கத் தொடர் வரை இந்திய அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பு வகித்த ஒரு வீரர், உலகக் கோப்பை போன்ற முக்கியத் தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 15 டி20 போட்டிகளில் கில் 291 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளதும், அதில் ஒரு அரைசதம் கூட அடங்கவில்லை என்பதும் அவருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அணியின் துணை கேப்டனாக இருந்த ஒரு வீரரை சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கியது முறையல்ல என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் போன்ற ஜாம்பவான்கள் ஆரம்ப காலத்தில் தடுமாறிய போது பிஷன் சிங் பேடி அவருக்கு ஆதரவாக நின்றதை உதாரணமாகக் காட்டிய அவர், இளம் வீரர்களுக்குத் தேர்வுக்குழு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், சுப்மன் கில்லின் திறமை மீது தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அணியின் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் தொடக்க வீரர்களாக இரண்டு விக்கெட் கீப்பர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதால், கில்லை அணியில் சேர்க்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகத் தொடர்ந்து செயல்படுவார் என்றும், விரைவில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அணியை வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. கில்லுக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.