மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை விளக்கும் வகையில் மெக்சிகோவிலிருந்து வெளியாகியுள்ள ஒரு காணொலி (Video), சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. ஒரு தெருநாய் கடைக்குள் நுழைந்து தனக்கான கிறிஸ்துமஸ் பரிசைத் தானே தேர்ந்தெடுத்ததுதான் இந்தச் செய்தியின் ஹைலைட்.

அதாவது மெக்சிகோவில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலுக்குள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு தெருநாய் தற்செயலாக நுழைந்தது. அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்க, அந்த நாய் மிகவும் நிதானமாக அங்கிருந்த ‘மினிசோ’ (Miniso) கடைக்குள் நுழைந்தது.

 

View this post on Instagram

 

A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)

அலமாரிகளில் அடுக்கப்பட்டிருந்த பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்த அந்த நாய், தனக்குப் பிடித்தமான ஒரு நாய் பொம்மையைத் கவ்விப் பிடித்தது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் அந்த நாய் மிகவும் தெளிவாக இருந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

முதலில் அங்கிருந்த ஊழியர் ஒருவர் விளையாட்டுத்தனமாக அந்தப் பொம்மையை நாயிடமிருந்து மீட்க முயன்றார். ஆனால், அந்த நாய் பொம்மையை விட மறுத்து, அது ஏற்கனவே தனக்குச் சொந்தமானது என்பது போல இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. நாய் மற்றும் ஊழியருக்கு இடையிலான இந்தச் செல்லச் சண்டையை அங்கிருந்த வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாயின் பிடிவாதத்தையும், அந்தப் பொம்மை மீது அது காட்டிய விருப்பத்தையும் பார்த்த கடை ஊழியர்கள் குழு ஒன்று, ஒரு உன்னதமான முடிவை எடுத்தது. அந்தப் பொம்மைக்கான பணத்தை ஊழியர்களே தங்கள் கைக்காசிலிருந்து செலுத்த முடிவு செய்தனர். இதையடுத்து அந்த நாய், தனது கிறிஸ்துமஸ் பரிசான அந்தப் பொம்மையை வாயில் கவ்விக்கொண்டு, வாலை ஆட்டியபடி மிகுந்த மகிழ்ச்சியுடன் கடையை விட்டு வெளியேறியது.

இது குறித்து அந்தக் கடையின் ஊழியர் அலே ரிவேரோ கூறுகையில், “அது பொம்மையைத் திருப்பித் தரவே இல்லை. அதன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எங்களால் இருக்க முடியவில்லை” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் தெருநாய் ஒன்றின் மகிழ்ச்சிக்காகக் கடை ஊழியர்கள் செய்த இந்தச் செயல், இணையதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.