சினிமாவில் அறிமுகமான காலம் முதல் தற்போது அரசியல் வருகை வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் நடிகர் விஜய் குறித்து, பழம்பெரும் நடிகர் அனுமோகன் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் உருவக் கேலி முதல் நடிப்பு வரை பல கிண்டல்களைச் சந்தித்தவர் நடிகர் விஜய். இன்று அவர் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளதோடு, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் மூலம் அரசியலிலும் கால் பதித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், விஜய் குறித்த பழைய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய நடிகர் அனுமோகன், ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அவர் கூறுகையில், “விஜய்யுடன் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது (தற்போது விட்டுவிட்டேன்). படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஓரமாக நின்று நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது விஜய் என்னிடம் ஏதோ பேசுவதற்காக வந்தார். ஆனால், என் கையில் சிகரெட் இருப்பதைப் பார்த்ததும் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டார்.”
தொடர்ந்து பேசிய அனுமோகன், “நான் அவரிடம் ‘என்ன தம்பி என்னாச்சு?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இல்லை அண்ணா, நீங்கள் சிகரெட் பிடிக்கிறீர்கள்’ என்றார். பரவாயில்லை சொல்லுங்கள் தம்பி என்றதற்கு, ‘எனக்கு அந்தச் சிகரெட் வாடையே பிடிக்காது அண்ணா. அது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. நீங்களும் இந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள்’ என்று மிகவும் அக்கறையோடு கூறினார்.”
“வயதில் என்னை விட அவர் சிறியவராக இருந்தாலும், சக கலைஞரின் உடல்நலம் மீது அவர் காட்டிய அந்த அக்கறை என்னை நெகிழ வைத்தது” என்று அனுமோகன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தனது படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருவதோடு, நிஜ வாழ்க்கையிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இந்த ஆரோக்கியமான அணுகுமுறை குறித்து அனுமோகன் பேசியிருப்பது, விஜய் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
