சென்னை 28′ இரண்டாம் பாகத்தின் மூலம் பிரபலமான நடிகை சனா அல்தாப்பிற்கு, டேட்டிங் வரக்கோரி மின்னஞ்சல் அனுப்பிய நபரின் விவரங்களை நடிகையே சமூக வலைதளத்தில் வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சனா அல்தாப். தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே அறிமுகமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்குத் தற்போது ஒரு நபரால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.
பாலாஜி என்ற நபர், தன்னைச் சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என அறிமுகப்படுத்திக் கொண்டு நடிகை சனாவிற்குத் தொடர்ந்து மின்னஞ்சல்களை அனுப்பி வந்துள்ளார். அதில், சனாவுடன் ‘டேட்டிங்’ செல்ல விரும்புவதாகவும், அதற்கு எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பயணத்திற்காக துபாய் அல்லது மாலத்தீவு என எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருப்பதாகவும் அந்த நபர் ஆசை வார்த்தைகளைக் கூறி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
தன்னைத் தவறான நோக்கத்தோடு அணுகிய அந்த நபரின் மின்னஞ்சலைச் சனா அல்தாப் சாதாரணமாகக் கடந்து செல்லவில்லை. அந்த மின்னஞ்சலை ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “இதைப் பாருங்கள்” என அந்த நபரின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அவர் கொடுத்துள்ள பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகைகளுக்கு இது போன்ற தொல்லைகள் தொடர்வதும், அதற்கு அவர்கள் துணிச்சலாகப் பதிலடி கொடுப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
