ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால் புத்தாண்டு தினத்தில் ஆன்லைன் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆன்லைன் வழி உணவு மற்றும் பொருட்கள் ஆர்டர் செய்யும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Swiggy, Zomato, Amazon, Flipkart, Zepto, Blinkit உள்ளிட்ட நிறுவனங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் டெலிவரி பார்ட்னர்களாக பணியாற்றி வருகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் இவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் நிலையில், அதற்கேற்ற ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு இல்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

இதனை வலியுறுத்தும் விதமாக, கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டெலிவரி ஊழியர்கள், அதே கோரிக்கைகளை முன்வைத்து தற்போது புத்தாண்டன்று மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கம் (TGPWU) மற்றும் இந்திய செயலி சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IFAT) ஆகியவை இணைந்து முன்னெடுத்துள்ளன. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரங்கள் மற்றும் பல இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள டெலிவரி ஊழியர்களும் இதில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி ஊழியர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஊழியர்களின் ஐடி-களை முடக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். அல்காரிதம் முறையில் பாரபட்சம் இன்றி, சமமான வேலை ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பணியிடத்தில் மரியாதை மற்றும் கண்ணியமான நடத்தை உறுதி செய்ய வேண்டும்.
கட்டாய ஓய்வு இடைவேளைகள் மற்றும் நியாயமான வேலை நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பேமெண்ட் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அளிக்கும் உதவி மையம் அமைக்க வேண்டும். விபத்து, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

டெலிவரி நிறுவனங்களின் தன்னிச்சையான செயல்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு, இந்த துறையை முறைப்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தப் போராட்டத்தின் காரணமாக புத்தாண்டு அன்று பெரும்பாலான நபர்கள் வீட்டில் இருந்தபடியே பண்டிகையை கொண்டாட உணவு ஆர்டர்கள் செய்வதால் கண்டிப்பாக அதில் சிக்கல்கள் எழும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி swiggy மற்றும் somato உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத்தொகை உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பீக் ஹவர் காலத்தில் டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களை பொறுத்து ஒரு ஆர்டருக்கு 150 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக 6 மணி நேரத்தில் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என நிறுவனங்கள் அறிவித்துள்ளது.