ஆரணி அருகே அட்டைப்பெட்டித் தொழிற்சாலையில், இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (65). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஆனந்தி, ஜெயலட்சுமி, தனலட்சுமி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். சிவலிங்கம், ஆரணி – தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் அட்டைப்பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை குடோனுக்கு வந்த இரண்டு லாரிகளிலிருந்து அட்டைப்பெட்டிகளை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு லாரியை அதன் ஓட்டுநர் எஞ்சினை அணைக்காமல் (Neutral) அப்படியே நிறுத்திவிட்டு கீழே இறங்கியதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென முன்னோக்கி நகரத் தொடங்கியது.
லாரி நகர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் மற்றும் சபீர் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள், அதனைத் தங்கள் கைகளால் தடுத்து நிறுத்த முயன்றனர். சிவலிங்கம் லாரியின் முன்பகுதியில் நின்று தனது முழு பலத்துடன் நிறுத்தப் போராடினார். எனினும் லாரியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அது சிவலிங்கத்துடன் முன்னால் நின்ற மற்றொரு லாரியின் மீது பலமாக மோதியது.
https://x.com/i/status/2005951697621836078
இதில் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிவலிங்கம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பக்கவாட்டில் நின்று லாரியைத் தடுக்க முயன்ற சபீர் உள்ளிட்ட இருவர் சாதுர்யமாக விலகியதால் உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த போலீஸார் சிவலிங்கத்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பற்ற முறையில் லாரியை நிறுத்திச் சென்ற ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
