சமூக வலைதளங்களில் தங்களது காணொளிகள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் தற்போது உயிருக்கே உலைய வைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன.

 

இணையத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியில் உயரமான பாலத்தின் கைப்பிடி சுவரில் நின்று பேசிக்கொண்டிருக்கும் நண்பனை மற்றொரு நண்பன் சற்றும் எதிர்பாராத வகையில் ஆழமான ஆற்று நீரில் தள்ளிவிடும் காட்சி காண்போரை பதற வைக்கிறது.

இது உண்மையிலேயே நடந்த அசம்பாவிதமா அல்லது சமூக வலைதளப் பக்கங்களில் அதிக பார்வைகளைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட நாடகமா என்ற விவாதம் தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஒருவேளை நீரில் விழுந்த இளைஞருக்கு நீச்சல் தெரியாமல் இருந்தாலோ அல்லது நீருக்கு அடியில் பாறைகள் இருந்தாலோ பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய ஆபத்தான செயல்கள் சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதுடன் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.