ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் ஃபரிதாபாத் இடையே திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகன வசதி கிடைக்காததால் வேனில் லிஃப்ட் கேட்ட 25 வயது இளம்பெண், இரண்டு நபர்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது தோழியைப் பார்க்கச் சென்ற அந்தப் பெண், நள்ளிரவில் வீடு திரும்ப வாகனம் கிடைக்காமல் தவித்தபோது அந்த வேனில் ஏறியுள்ளார்.

ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் வேனைச் சுற்றி வரச் செய்த அந்த நபர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணின் முகத்தில் மட்டும் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன.

கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் நிலவிய சூழலில் அப்பெண் உதவி கேட்டு எழுப்பிய கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஓடும் வாகனத்திலிருந்து அப்பெண்ணை அந்த நபர்கள் வெளியே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரிக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாகக் கோட்வாலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.