சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இன்று தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இந்தத் திடீர் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். ஏற்கனவே இன்று காலை அண்ணா அறிவாலயம் முன்பு மறியலில் ஈடுபட்டுப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக மெரினாவிலும் போராட்டம் வெடித்தது.

​போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், சில தூய்மைப் பணியாளர்கள் நிலைகுலைந்து அங்கேயே மயக்கமடைந்தனர். இதனால் மெரினா கடற்கரை பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. தனியார்மயமாக்கலுக்கு எதிராகத் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடும் இவர்களைப் போலீசார் அப்புறப்படுத்திய விதம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.