வங்கதேசத்தின் பிரோஜ்பூர் மாவட்டம், தும்ரிதாலா கிராமத்தில் உள்ள 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு அஞ்சி ஐந்து குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, வீட்டின் கதவுகள் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இருப்பினும், கதவுகளை உடைத்துக் கொண்டு அவர்கள் உயிர் தப்பிய நிலையில், அவர்களது உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாடி கொலைக்குப் பிறகு, அங்கு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை சுமார் 2,500-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். மறுபுறம், வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான், டாக்கா மற்றும் போகுரா ஆகிய இரு தொகுதிகளில் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்.

பிஎன்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள அவருக்கு ஆதரவாகப் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். தற்போதைய இடைக்கால அரசின் கீழ் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், ஆளும் அவாமி லீக் கட்சி பங்கேற்காத நிலையில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சிக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.