விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றில், “நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்” என லலித் மோடி பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொருளாதார குற்றச்சாட்டுகளில் சிக்கி, இந்திய அரசால் தேடப்பட்டு வரும் விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகியோர் வெளிநாட்டில் தங்கி இருக்கும் நிலையில், இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் அந்த வீடியோ வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இவர்களை இந்தியா அழைத்து வர முடியாதது குறித்து மத்திய அரசுக்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
“இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள் மற்றும் இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள் அனைவரையும் இந்தியா கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. குறிப்பாக, இந்த இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நாடுகளின் அரசுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்கான சட்டப்பூர்வ செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன. பல வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தடைகளையும் கடந்து, அவர்கள் இந்திய நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்கொள்ளும் நாள் வரும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறிய லலித் மோடி, அந்த வீடியோ குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, நான் மிகுந்த மரியாதை கொடுக்கும் இந்திய அரசிடம் ஆழ்ந்த மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. வெளியான செய்தி போன்று பேச வேண்டும் என்பதே எனது நோக்கம் அல்ல” என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
