ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் நகருக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், அங்குள்ள தங்குமிட வசதிகள் மற்றும் அதிகப்படியான கட்டணம் குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குளிர்காலத்தின் உச்சகட்டமான சுற்றுலாப் பருவத்தில் ஜெய்சல்மேருக்குச் செல்ல வேண்டாம் என அவர் பயணிகளை வலியுறுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வாடகையாகச் செலுத்தியும், மிகச்சிறிய அளவிலான அறையே தமக்கு வழங்கப்பட்டதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். “10,000 ரூபாய்க்கு இவ்வளவு சிறிய அறையா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அடிப்படை வசதிகள் கூட திருப்திகரமாக இல்லை என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

“>

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் போது, ஹோட்டல் நிர்வாகங்கள் தேவையற்ற முறையில் விலையை உயர்த்துவதாகவும், ஆனால் அதற்கு இணையான தரமான சேவையை வழங்குவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வசதியான தங்குமிடங்களை எதிர்பார்ப்பவர்கள் இதுபோன்ற சீசன் காலங்களில் ஜெய்சல்மேர் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இணையவாசிகள் பலரும் இந்தப் பெண்ணின் கருத்துக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர், இது சுற்றுலாத் தலங்களில் நிலவும் கட்டணக் கொள்ளை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.