இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, பதுங்கு குழியில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தார் முதல் முறையாக பொதுவெளியில் ஒப்புக் கொண்டுள்ளார். அதிபர் முதல் ராணுவத் தலைமை தளபதி வரை பதுங்கு குழிகளில் இருந்ததாகும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பதிலளித்து பாகிஸ்தான் தரப்பும் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. சுமார் 4 நாட்கள் நீடித்த இந்த இருதரப்பு தாக்குதல்களில், இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் பயன்படுத்தியது.
இந்த தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மற்றும் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இஸ்லாமாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தார், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேசினார்.
BIG BREAKING 🚨 Pakistan President Asif Ali Zardari admitted in a public rally that the Pakistani military was hiding in bunkers during Operation Sindoor 😳
He said “Military advised me also to hide inside the bunkers during Op Sindoor”
pic.twitter.com/xs33hJSu1w— News Algebra (@NewsAlgebraIND) December 27, 2025
அப்போது அவர் கூறுகையில்,
‘‘இந்திய ராணுவத்தின் தீவிர தாக்குதல் காரணமாக, எனது ராணுவ செயலாளர், பதுங்கு குழியில் தஞ்சமடைய அறிவுறுத்தினார். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். உயிர்தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்தால், பதுங்கு குழியில் அல்ல; போர்க்களத்தில்தான் ஒரு தலைவனாக என் உயிர் பறிபோக வேண்டும் என்று தெரிவித்தேன். இந்த தாக்குதல் ஏற்படும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தேன்’’ என்றார்.
இதற்கிடையே, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் இதுகுறித்து கூறுகையில்,
‘‘ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றபோது, பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். ராணுவத் தலைமை தளபதி ஆசிம் முனிர் கூட பதுங்கு குழியில்தான் இருந்தார். சிப்பாய்கள் மட்டுமே வெளியில் இருந்தனர்’’ என்றார்.
இந்த ஒப்புதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் தாக்குதல் பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை வெளிப்படுத்துவதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
