பல்கேரியாவின் புகழ்பெற்ற கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா, பல தசாப்தங்களுக்கு முன்பே மனிதகுலத்தின் வீழ்ச்சி குறித்து கணித்திருந்த பல தகவல்கள் தற்போது உண்மையாகி வருகின்றன.

குறிப்பாக, எதிர்காலத்தில் மனிதர்கள் சிறிய மின்னணு சாதனங்களுக்கு அடிமையாவார்கள் என்றும், அது மனித நடத்தையையே தலைகீழாக மாற்றும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்த ‘சிறிய சாதனம்’ என்பது இன்றைய ஸ்மார்ட்போன்களைத் தான் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பேசுவதைத் தவிர்த்து, இந்த இயந்திரங்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள் என்றும், இதன் விளைவாக உண்மையான உறவுகளில் விரிசல் ஏற்பட்டு, மனித உணர்வுகள் மரத்துப் போகும் என்றும் அவர் அன்றே கணித்துக் கூறியது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அச்சுறுத்தும் உண்மையாக மாறியுள்ளது.

இந்த மோகம் வெறும் பழக்கத்துடன் நிற்காமல், ‘டிஜிட்டல் தொற்றுநோயாக’ உருவெடுத்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, சுமார் 24 சதவீத குழந்தைகள் உறங்குவதற்கு முன்பாக கைபேசிகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இது குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கவனிப்புத் திறன் குறைபாடு, மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்ற தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள இந்தத் திரைப் பழக்கம், மனிதர்களை இயந்திரங்களாக மாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாபா வங்கா எச்சரித்த அந்த ‘நிசப்தமான கொலையாளி’ இன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புகுந்துவிட்டதை இப்போதைய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.