திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு பகுதியில், ரீல்ஸ் மோகத்தில் வடமாநில இளைஞர் ஒருவரை கத்தியால் கடுமையாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு, வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உடலில் 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக திருத்தணி காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காயமடைந்தவர் சூரஜ் (34) என்பதும், இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ரயிலில் பயணம் செய்து வந்த சூரஜை, அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு கும்பல் கஞ்சா போதையில் ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் வம்பிழுத்து தாக்கியதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக, நந்தகோபால் (17), விக்னேஷ் (17), சந்தோஷ் (17),சந்தோஷ் (17)
ஆகிய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதையில் இருந்த இச்சிறுவர்கள், வடமாநில இளைஞர் சூரஜை கத்தியால் வெட்டியதை வீடியோவாக பதிவு செய்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
கொலை முயற்சி வழக்கு

மேலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து சூரஜை அழைத்து வந்து, ரயில்வே குடியிருப்பு பகுதியில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நான்கு சிறுவர்களின் மீதும் கொலை முயற்சி, பொது இடங்களில் அச்சுறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ரீல்ஸ் மோகமும் கஞ்சா போதையும் இளைஞர்களை குற்றச் செயல்களுக்கு தள்ளி வருவதாக இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாகவும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.