பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், மனைவியின் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் 39 வயதான ஆயிஷா சித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மசாஜ் பார்லர் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில், அவரது கணவர் சையத் ஜபி அந்த வேலையைச் செய்யக் கூடாது எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். டிசம்பர் 26-ஆம் தேதி இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சையத் ஜபி கத்தியால் ஆயிஷாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆயிஷாவுக்கு இது மூன்றாவது திருமணம், சையத்திற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்கள் திருமணம் செய்து மூன்று மாதங்களே ஆன நிலையில், மனைவியின் நடத்தை மீது சையத்திற்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. கொலை செய்த பிறகு, சையத் ஜபி தானாகவே முன்வந்து சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடும்பத் தகராறுகள் கொலையில் முடிந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.