சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். “அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்; இடையில் வரும் அக்கப்போர்களைக் கடந்து நாம் வெல்ல வேண்டும்” எனத் தொண்டர்களிடையே ஆவேசமாகப் பேசினார்.

“மொழி அழிந்தால் ஒரு இனத்தின் அடையாளமே அழிந்துவிடும்; உலகில் ஆகச்சிறந்த இலக்கியங்களைத் தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுமே உண்டு” எனத் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றினார்.

மக்களிடம் இருக்கும் மறதி தான் அடிமை நிலைக்குக் காரணம் என்று குறிப்பிட்ட சீமான், ஆட்சி அதிகாரம் மட்டுமே விடுதலையைத் தரும் கருவி என முழங்கினார்.

“மும்மொழிக் கொள்கையும் இல்லை, இருமொழிக் கொள்கையும் கிடையாது; தமிழ்நாட்டில் இனி ஒரே மொழி கொள்கை தான், அது தமிழ் மட்டும் தான்” என அதிரடி காட்டினார்.

திராவிடக் கட்சிகள் தமிழினத்தை ஏமாற்றி அழிக்கும் வேலையைச் செய்வதாகவும், காசு கொடுத்துக் கூட்டம் கூட்டுவதே பெரிய கட்சிக்கு அடையாளமல்ல என்றும் சாடினார்.  தேர்தல் அங்கீகாரத்தைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, விரைவில் அரியணை ஏறும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சூளுரைத்தார்.