திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து அனல் பறக்கும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் பாஜக ஆட்டம் போடுவதற்கு அதிமுக தான் முக்கியக் காரணம்; அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், நடிகர் விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் அரசியல் செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வுக்குத் துணை போகும் வகையில் இருப்பதாகவும், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து விஜய் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் ஒரு தரப்பினர் “பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன்” என்று பேசியதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், அத்தகைய சனாதன அரசியலை வேடிக்கை பார்க்க முடியாது எனச் சீறினார்.
“திமுக கூட்டணிக்கு முட்டுக் கொடுக்க நாங்கள் பேசவில்லை; எங்கள் கருத்தியலான சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் அரசியலுக்காகவே பேசுகிறோம்; எங்களுக்குக் கொள்கை தான் முதன்மையானது, கூட்டணி என்பது இரண்டாம் பட்சம் தான்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மறைந்த தலைவர் கலைஞர் பாஜக-வுடன் கூட்டணி வைத்தபோது கூட கருத்தியலில் உறுதியாக இருந்தார், ஆனால் தற்போதைய அதிமுகவினர் பாஜக-வின் கருத்தியல் அடிமைகளாக மாறிவிட்டனர் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
