பெங்களூருவின் பரபரப்பான மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 25 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை நகரை அதிர வைத்துள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்த 55 வயது முதியவர் முத்தப்பா, குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
“ஆரம்பத்தில் தற்செயலாகப் என்று நினைத்தேன், ஆனால் அவர் வேண்டுமென்றே என் மீது கை வைப்பதையும், உரசுவதையும் உணர்ந்தபோது நான் உறைந்து போனேன்” என அந்தப் பெண் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னைப் பின் தொடர்ந்த முதியவரைப் பார்த்த அந்தப் பெண், ஆத்திரமடைந்து மெட்ரோ நிலையத்திலேயே அவரைப் பளார் என அறைந்துள்ளார்.
முதியவர் அழுது கொண்டே மன்னிப்புக் கேட்டாலும் விடாத அந்தப் பெண், மெட்ரோ பாதுகாப்புக் குழுவினரிடம் அவரைப் பிடித்துக் கொடுத்தார்.
விசாரணையில், அந்த நபர் மதுபோதையில் இருந்ததும், எந்த நிலையத்திலும் இறங்காமல் கடந்த ஒரு மணி நேரமாக ரயிலிலேயே சுற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக உப்பார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த முதியவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். “ஆபத்து என்று தெரிந்தால் அங்கிருந்து எழுந்து சென்றுவிட வேண்டியதுதானே” எனப் போலீஸார் அறிவுரை கூறியது அந்தப் பெண்ணை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
