ஹைதராபாத் நல்லகுண்டா பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் கணவனே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி திரிவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, குழந்தைகளின் கண் முன்னே திரிவேணி மீது பெட்ரோல் ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், பலத்த தீக்காயங்களுடன் இருந்த திரிவேணியை மீட்க முயன்றனர், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது தாயைக் காப்பாற்ற முயன்ற மகளையும் வெங்கடேஷ் தீயில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நல்வாய்ப்பாக அந்தச் சிறுமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினரிடையே ஏற்பட்ட சந்தேகமே இந்தப் படுகொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கணவன் திருந்திவிடுவான் என்று நம்பி பெற்றோரின் வீட்டிலிருந்து மீண்டும் வந்த திரிவேணிக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள வெங்கடேஷை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.