மும்பை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்றால், சில தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, விண்வெளி பயணத்திற்கு முன்பே பலரது ஞானப்பற்கள் அகற்றப்படுகின்றன. விண்வெளியில் ஏற்படக்கூடிய எந்தவொரு மருத்துவ அவசரநிலையையும் கையாள விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால், விண்வெளியில் செய்ய முடியாத ஒரே மருத்துவ செயல் பல் அறுவை சிகிச்சை தான் என்றார். இதனால், விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பே, விண்வெளி வீரர்களின் பற்களில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாததை உறுதி செய்து கொள்கிறார்கள். இதற்காகவே தனது இரண்டு ஞானப்பற்கள் அகற்றப்பட்டதாகவும், தன்னுடன் பயிற்சி பெற்ற பிரசாந்த் நாயர் மூன்று பற்களையும், அங்கத் பிரதாப் நான்கு பற்களையும் அகற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “விண்வெளி வீரராக வேண்டும் என்று நினைத்தால், உங்கள் ‘ஞானத்தை’—அதாவது ஞானப்பல்லை—விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அவர் வேடிக்கையாக கூறியபோது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சிரிப்பில் மூழ்கினர். இதற்கிடையே, மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாவது, 17 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் கடைவாய் பகுதியில் கடைசியாக முளைக்கும் பல்லே ‘ஞானப்பல்’ அல்லது ‘அறிவுப்பல்’ என அழைக்கப்படுகிறது.
மேலும் மனிதன் மனரீதியாகவும், அறிவுரீதியாகவும் முதிர்ச்சி அடையும் பருவத்தில் இது முளைப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை “விஸ்டம் டீத்” என்று குறிப்பிடுகின்றனர்.
