மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்டதன் காரணமாக 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சிறுவன் 115 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
சிந்த்வாரா மாவட்டம், ஜடாச்சாபர் கிராமத்தைச் சேர்ந்த குணால் யதுவன்ஷி (5) என்பவர், கோல்ட் ரிஃப் என்ற இருமல் மருந்தை உட்கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவராவார். இந்த கோர சம்பவத்தில் 24 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழந்த நிலையில், குணால் மட்டும் பல மாதங்கள் நீடித்த தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்துள்ளார்.
2025 ஆகஸ்ட் 24-ம் தேதி, குணாலுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை உள்ளூர் மருத்துவர் பிரவீன் சோனியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர் அளித்த மாத்திரைகள் மற்றும் இருமல் சிரப்பை உட்கொண்டதன் பின்னர், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணாலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இரு சிறுநீரகங்களும் இருமல் மருந்தின் பக்கவிளைவால் செயலிழந்தது தெரிய வந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சிறுவன் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம், தினசரி கடுமையான டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறுவன் உயிர் பிழைப்பது குறித்து சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்த போதும், முடிந்தவரை சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ச்சியான சிகிச்சையின் விளைவாக குணால் உயிர் பிழைத்திருந்தாலும், இருமல் மருந்தின் தாக்கத்தால் அவரது கண்களில் உள்ள திரவம் வறண்டு, முழுமையாக பார்வை இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சிறுவன் முழுமையாக குணமடைவது குறித்து உறுதி அளிக்க முடியாத நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் குணால் யதுவன்ஷி வீடு திரும்பியுள்ளதால், அவரது குடும்பத்தினர் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
“குணால் உயிருடன் இருப்பதே எங்களுக்கு பெரிய ஆறுதல். பார்வை இல்லாவிட்டாலும் அவன் எங்களுடன் இருப்பதே போதும்,” என சிறுவனின் தந்தை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த சம்பவம், தரமற்ற மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் ஒரு முறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
