இந்திய கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக வெறும் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதில் 16 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடங்கும். வெறும் 36 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த ஏபிடி வில்லியர்ஸின் உலக சாதனையை முறியடித்ததோடு, சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றுள்ளார்.

இந்த அபாரமான திறமையை பாராட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், வைபவ் சூர்யவன்ஷியை ‘ஜூனியர் சச்சின்’ என்று புகழ்ந்துள்ளார். “இத்தனை சிறிய வயதில் இத்தகைய அசாத்தியமான திறமையை சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு வைபவ் இடத்தில்தான் காண்கிறேன்.

அவர் என்ன சாதித்தார் என்பது நமக்கே தெரியும், எனவே இனியும் நாம் எதற்காக காத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள தரூர், வைபவ்வை உடனடியாக இந்திய தேசிய அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 14 வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும் வைபவ், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்.