வியட்நாமில் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி, சுமார் ₹40 லட்சம் (1.2 பில்லியன் டாங்) மோசடி செய்த பெண் 5 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
வியட்நாமின் தான் ஹோவா மாகாணத்தைச் சேர்ந்த நுயென் தி து (41) என்ற பெண், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது தாயார் திரான் தி தாப்புடன் இணைந்து இந்த சதியைத் தீட்டியுள்ளார்.
குளியலறையில் விழுந்துவிபத்து ஏற்பட்டது போலவும், அதில் அவர் இறந்துவிட்டதாகவும் நாடகமாடி, உள்ளூர் அதிகாரிகளிடம் இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர். ஒரு சாமியாரின் உதவியுடன் ரகசியமாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அவர் அடக்கம் செய்யப்பட்டதாக ஊர் மக்களை நம்ப வைத்துள்ளனர்.இந்த மோசடித் திட்டம் மூலம் புருடென்ஷியல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சுமார் ₹40 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகையை அவரது தாயார் பெற்றுள்ளார்.
சட்டப்படி உயிரிழந்தவராகக் கருதப்பட்ட நுயென், தெற்கு மாகாணமான டாங் நாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி குவாங் ட்ரங் வார்டு அலுவலகத்திற்கு நேரில் சென்ற நுயென், தனது இறப்புப் பதிவை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே இறந்ததாகப் பதிவான நபர் உயிருடன் வந்து நின்றதைக் கண்டுஅதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காப்பீட்டுப் பணத்திற்காக அவர் அரங்கேற்றிய நாடகம் அம்பலமானது. இதையடுத்து நுயென் மற்றும் அவரது தாயார் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரும் தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
