சென்னையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ரகசியமாகப் படம்பிடித்த 57 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான ஒரு பெண், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக யாரோ மொபைல் போனில் படம்பிடிப்பதை கவனித்துள்ளார்.
மேலும் அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிடவே, அவரது தாய் உடனடியாக வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தார். அங்கு அண்டை வீட்டைச் சேர்ந்த தொழிலதிபரான நந்தகுமார் என்பவர் கையில் மொபைல் போனுடன் நின்றிருந்ததை கண்டு அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்நிலையில் முதலில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யத் தாமதித்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் துணை ஆணையர் ஜெரினா பேகத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் அயனாவரம் போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
அந்த மொபைலை ஆய்வு செய்தபோது, அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பல வீடியோக்கள் மட்டுமன்றி, இன்னும் பல திடுக்கிடும் ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
